சொலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் உருக்கமான இரங்கல்
பிரபல தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சொலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
90 வயதில் காலமான சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு, அவருடன் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற மேடைகளில் பயணித்த பேச்சாளர் பாரதி பாஸ்கர், கண்ணீர் மல்க உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்து பேசிய பாரதி பாஸ்கர், “என் தகப்பனை இழந்துவிட்டேன்” எனக் கூறி தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சொலமன் பாப்பையா தனக்கு வெறும் பட்டிமன்ற நடுவராக மட்டும் இருக்கவில்லை என்றும், சொந்தத் தந்தையைப் போல வழிகாட்டியவர் என்றும் குறிப்பிட்டார்.
“இந்தச் செய்தியை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் கலங்கிப் போய் நிற்கிறேன். என்னைச் சுற்றி ஒரே இருளாக இருப்பது போல் உணர்கிறேன். ஐயாவுடன் எனது பட்டிமன்றப் பயணம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நீண்ட பயணத்தில் அவர் எனக்கு ஒரு நடுவராக மட்டுமல்லாமல், தகப்பனைப் போல இருந்து வழிகாட்டினார்” என பாரதி பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “சொலமன் பாப்பையா ஐயாவின் மறைவால் நாங்கள் அனைவரும் அநாதையாகிவிட்டது போல் உணர்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்புகூட விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றப் படப்பிடிப்புக்காக சிவகாசியில் சொலமன் பாப்பையாவுடன் ஒன்றாக இருந்ததாகத் தெரிவித்த பாரதி பாஸ்கர், அப்போது அவர் மிகவும் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அன்று மேடையில் சிறப்பாகப் பேசிய நிலையில், இவ்வளவு விரைவில் அவர் மறைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பட்டிமன்றங்கள் மூலம் தமிழையும், சமூகச் சிந்தனைகளையும் பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த சொலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் இலக்கியம் மற்றும் பேச்சுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பாரதி பாஸ்கர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.